Monday, February 26, 2007

தொடர்ந்து....

நேற்று போன வாரம் சந்தித்த அதே நண்பருடன் பேசி கொண்டிருந்த பொழுது, இந்த விஷயம் தோன்றியது.

நாம் ஒரே விதமான செயல்களை, ஒரு விஷயத்துக்காக தினசரி செய்தோமென்றால், அந்த விஷயத்தில் அடுத்த கட்ட முன்னேற்றம் என்பது ஏற்படாது. அதனால் அப்படிப்பட்ட எல்லா விஷயங்களக்கும் ஒரு தற்காலிக ஓய்வாவது கொடுக்க வேண்டும். இதில் நாம் அன்றாடம் படிப்பதும் எழுதுவதும் கூட அடங்கும்.

இப்படி செய்து பாருங்கள், ஒரு கனமான விஷயத்தைப் பற்றிய புத்தகம் அல்லது புத்தகங்கள், தினத்துக்கு ஒரு ஐம்பது பக்கமாவது படியுங்கள். விஷயம் உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்க வேண்டும். ஆனால் இப்படி படித்த விஷயத்தைப் பற்றி, படிக்கும் காலத்திலும், அதற்கு அடுத்த பத்து நாட்களிலும், யாரிடமும் பேசாமலும், படித்த விஷயங்களை நேரடியாவோ, மறைமுகமாகவோ வெளிப்படுத்தாமலும் இருந்து பாருங்கள். ஒன்று படித்த பத்து நாட்களுக்குப் பின் அந்த விஷயம் உங்களுக்கு மறந்து போகும். அல்லது ஒரு வித புதிதாக எதையும் யோசிக்க முடியாத நிலை ஏற்படும்.

நமது மூளை ஒரே நேரத்தில் RAMஆகவும், ROMஆகவும் செயல்படுகிறது. நமக்கு முதலில் அறிமுகமாகும் விஷயங்கள் RAMஇல் சேமிக்கப் படுகிறது. அந்த விஷயம் தேவையானதாய் இருந்தால் கேச்சி(Cache) போன்ற ஒரு தற்காலிக RAMஇல் சேமிக்கப்படுகிறது. தேவையில்லையென்றால், குறிப்பிட்ட குறுகிய காலத்தில் மறந்து, அழிந்து விடுகிறது.

ஆனால் இந்த தேவையான விஷயங்கள் நமது ROMஇல் சேமிக்கப்பட வேண்டுமென்றால், நாம் ஒரு காரியம் செய்தாக வேண்டியிருக்கிறது. அந்த விஷயங்களைப் பற்றி ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுத்த வேண்டும். பேசுதல், எழுதுதல், மௌனத்தின் மூலம் கூட வெளிப்படுத்தலாம். இப்படி வெளிப்படும் விஷயங்கள்தான் நமது ROMஇல் ஓரளவாவது சேமிக்கப் படுகின்றன. இதற்கப்புறம், நமது ROMஇலிருந்தும், கேச்சியிலிருந்தும் இந்த விஷயங்கள் உடனே அழிந்து போவதால், மூளை ஃப்ரெஷாகி, புதிய விஷயங்களைப் உள்ளே ஏற்றுக்கொள்ள தயாராகிவிடுறது.இந்த உதாரணம் தொடர்ந்து படிப்பதால் ஏற்படுவது.

இந்த "தொடர்ந்து..." பிரச்சனை எல்லாவற்றிலும் உண்டு. தொடர்ந்து எழுதுவதில் உள்ள பிரச்சனை, விஷயங்கள் விரைவாக காலியாதல். புது விஷயங்களின் வரவை விட எழுதும் வேகம் அதிகமாயிருப்பதால், ஒரு நிலையில் எழுத்து சாரமற்று போய்விடும் அபாயம் ஏற்படுகிறது.

நேற்று நடந்த மினி வலைப்பதிவர்கள் சந்திப்பில்கூட ஒரு வலைப்பதிவர் என்னை கேட்டார், "நீங்கள் ஒன்றுமே பேசவில்லையே" என்று. ஏனென்றால் அந்த சந்திப்பில் நான் பேசிய வார்த்தைகளை எண்ணிவிடலாம். நான் "எனது சுபாவமே அப்படித்தான்" என்றேன். பெரும்பாலான நேரங்களில் நான் அப்படி மௌனமாக இருந்தாலும், எப்பொழுதும் "தொடர்ந்து" அப்படியே இருக்க மாட்டேனென்றும், பல சமயங்களில் நன்றாகவே பேசுவேனென்றும், அந்த நண்பருக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, February 19, 2007

சர்வாதிகாரமும் - ஜனநாயகமும்

இந்த ஞாயிறன்று (வலைப்பதிவு) நண்பர் ஒருவரை சந்தித்தேன். பேசிக்கொண்டிருந்தபொழுது ஜனநாயகம் பற்றி பேச்சு வந்தது. நான் அனைவரும் கூடி ஓட்டுப்போட்டு ஆள்பவரை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முறை சரியான முறை கிடையாதென்றேன். பிளேட்டோ கூறியது போல் ஒரு நல்ல சர்வாதிகாரியே, ஒரு நாட்டை ஆள தகுதியானவன் என்றேன். உதாரணத்திற்கு, நான் அலெக்ஸான்டரை(கி.மு.-கி.பி.) சுட்டிக்காட்டினேன்.

அதற்கு அவர், சர்வாதிகாரியினால் மட்டும் எதையும் சாதித்து விட முடியாது. எல்லோரும் அவன் சொல்வதைத்தான் கேட்டு நடப்பார்கள் என்பது நிச்சயமில்லை. ஒரு கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பதும், நடக்காததும், அவரவர் சூழ்நிலைகளையும், மனப்போக்குமே நிர்ணயிக்கிறது.

ஜனநாயகத்தில் என்னதான் தகுதில்லாதவர்கள் ஆண்டாலும், அந்த தலைமைகளை மாற்றிவிடும் வாய்ப்பு, நமக்கு அவ்வபொழுதாவது கிட்டுகிறதென்றார்.

மேலும் சர்வாதிகாரம் வந்தால் அராஜகம்தான் தலைதூக்கும் என்றார். டால்ஸ்டாயின் வார் அண்ட் பீஸை உதாரணம் காட்டினார்.

நான் நல்ல சர்வாதிகாரி என்று நல்லவில் ஒரு அடிக்கோடிட்டேன். அவர் நல்லது என்பதே சார்பானதுதானே. உங்களுக்கு நல்லதாக இருப்பது என்க்கு கெட்டதாக இருக்கலாம் என்றார். இதற்கு அந்த நேரத்தில் என்னால் பதில் பேச முடியவில்லை.

ஆனால் இப்பொழுதும் என் கருத்தில் மாற்றமில்லை. ஒரு நல்ல, நிர்வாகத்திறமையுள்ள சர்வாதிகாரியால் மட்டுமே ஒரு நல்லாட்சியை கொடுக்க முடியும் என்பது எனது கருத்து. மாற்று கருத்துகள் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் எனது கருத்து இதுதான்.