Saturday, March 17, 2007

மதிப்பெண் வேட்டை

இப்பொழுது +2 தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. 10வது ஆரம்பிக்க இருக்கிறது. ஒவ்வொருவரும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வித விதமான குறிப்புகளை மாணவர்களுக்கு சொல்லி கொண்டிருக்கிறார்கள். இந்த குறிப்புகளையெல்லாம் கேட்கும் பொழுது சிரிப்புத்தான் வருகிறது(எனக்கு!).

பரீட்சை என்பதன் நோக்கம் என்ன? உனக்கு கொடுக்கப்பட்ட பாடங்களை நீ சரியாக புரிந்து கொண்டிருக்கிறாயா என்று சோதனை செய்து பார்ப்பது. ஆனால் இப்பொழுது பரிட்சைகள் அதற்காகவா நடத்தப் படுகின்றன?

அடுத்த கட்டத்துக்கு செல்ல தேவைப்படும் நுழைவுச் சீட்டு, இப்போதைய தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள். அதனால், பரிட்சைகள் புரிந்ததை சோதிப்பது என்பதிலிருந்து விலகி, மதிப்பெண்களை வேட்டையாடுவது என்ற கோணத்தில்தான் அணுகப்படுகின்றன.

மதிப்பெண்களை எப்படியெல்லாம் வேட்டையாடலாம்? முக்கியமான பாயிண்ட்களை அடிக்கோடிட்டு காட்டு! அழகாக எழுது! இத்தனை மதிப்பெண்கள் கேள்விக்கு இத்தனை பக்கங்கள் எழுத வேண்டும்! பதில் தெரியாவிட்டாலும் சும்மா கொஞ்சம் எழுதிவிட்டு வா! போன்ற உபதேசங்கள் நமது மாணவர்களுக்கு எல்லா இடங்களிலிருந்தும் கிடைக்கும் அறிவுரைகள்.

பல ஆசிரியர்கள், "Alternate Question"களில் இந்த பாடத்திலிருந்து ஒரு கேள்வியும், அந்த பாடத்திலிருந்து ஒரு கேள்வியும் கண்டிப்பாக வரும். அதனால் அந்த பாடத்தை படிக்க வேண்டாம். இந்த பாடத்தை மட்டும் நன்றாக படி, என்று அறிவுறுத்துவார்கள்!?! இன்னும் கொஞ்சம் விவரமறிந்தவர்கள், இந்த கேள்விதான் கண்டிப்பாக வரும். அதனால் வேறு எதையும் படிக்க வேண்டாம் என்று கூட சொல்வார்கள்(இப்படிப்பட்ட அறிவுரை ச்மீபத்தில் ரேடியோவில் கூட கூறப்பட்டது!).

இப்படி ஆடப்படும் மதிப்பெண் வேட்டைகளின் மூலம் அந்த மாணவன் பாடத்திலுள்ளதை முழுமையாக புரிந்து கொள்ளுதல் என்பது எங்கே இருக்கிறதென்று தெரியவில்லை? மாணவர்களை குறை சொல்லி பயனில்லை!! என்ன விதைக்கிறோமோ அதுவே ஊன்றி வளரும் பருவமது.

யோசனை கூறும் ஆசிரியர்களின் தவறென்று கொள்ளலாமா? அவர்களும் என்ன செய்வார்கள் பாவம்? அவர்களது மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு இவைதான் சிறந்த வழி!?!

கையெழுத்து அழகாக இருந்தால்தான் திருத்துபவர் ஓரளவாவது படிக்கிறார். அதிலும் அவர் கண்ணில் படுவதற்காக அடிக்கோடிட வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் அதை அவர் கவனிக்காமல் விட்டு விடுவார்!!! கையெழுத்து மோசமாயிருந்தாலோ நீ என்னதான் ஐன்ஸ்டீனையே வளைத்து வளைத்து எழுதியிருந்தாலும், அவர் படிக்காமல் குத்துமதிப்பாக ஒரு மதிப்பெண் போட்டு விட்டு, அடுத்த பேப்பரை திருத்த போய் விடுவார்!!!

அவரும் என்னதான் செய்வார் பாவம், ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் இத்தனை பேப்பராவது திருத்தினால்தான், அவர் போட்டு வைத்திருக்கும் பட்ஜெட்டிற்கு தேவையான அளவு காசு கிடைக்கும். அந்தக் கவலை அவருக்கு. அதை விட்டு விட்டு மாணவன் கஷ்டப்பட்டு படித்து எழுதியிருக்கிறானா, இல்லை உள்ளே கதை விட்டிருகிறானா என்றா பார்த்து கொண்டிருக்க முடியும்? அவன் எக்கேடு கெட்டால் அவருக்கென்ன?

இப்படி திருத்தப்படும் விடைத்தாள்களின் மூலம்தான் மாணவனின் அடுத்த கட்டம் சமூகத்தால் தீர்மானிக்கபடுகிறது. எப்படி? மாணவன் தனது பழைய பாடங்களை ஒழுங்காக புரிந்து கொண்டான்/கொள்ளவில்லை என்று!!

அதிக மதிப்பெண் பெற்றவன் புரிந்து கொண்டான். குறைந்த மதிப்பெண் பெற்றவன் புரிந்து சரியாக கொள்ளவில்லை.

உண்மையிலேயே அப்படித்தானா? எனக்கு புரியவில்லை!! உங்களுக்கு புரிகிறதா?

1 comment:

வடுவூர் குமார் said...

இது பலமுறை இதற்கு முன்பு அடிச்சு துவைத்து காயப்போட்டுள்ளது,இருந்தாலும் இப்போது தேரிவு நடைபெற்றுக் கொண்டிருப்பதால்,ஏதாவது கருத்து வரும் என்று நினைக்கிறேன்.