Wednesday, October 15, 2008

மேலும் ஒரு மீம்

இந்த மீம் தொடருக்கு யாராவது அழைத்தால் நாசூக்காக மறுத்து விடவேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். நர்சிம் செல்லில் அழைத்தபொழுதுகூட "இல்லை. முடியாது" என்ற வார்த்தைகள் தொண்டை வரை வந்து விட்டது. ஆனால் அவர் குரலில் என்ன மாயம் இருந்ததோ தெரியவில்லை, "ஓ! போட்டுறலாம்" என்று சொல்லிவிட்டேன். அதனால் இதைப் படித்துவிட்டு யாராவது திட்டவேண்டும் என்றால் நர்சிம்மையே திட்டவும். எல்லாப் பழியும் நர்சிம்முக்கே!!

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
சிறு வயதில் தியேட்டரில் பார்த்த படம் எவையெவையென்று நினைவில் இல்லை. வீட்டில் விசிஆரில், கர்ணன் படம் அதிகதடவை பார்த்தது நினைவிலிருக்கிறது. அதில் வரும் போர்க்களக் காட்சிகள் அந்த வயதில் மிகவும் கவர்ந்தது.
வீட்டோடு அல்லாமல் தனியாக திரையரங்கில் பார்த்த முதல் படம் பம்பாய். அப்புறம் வயதுக்கு வந்தபின் சில சொல்லக்கூடாத படங்கள்...

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா. ஆங்கில படத் தழுவலாயிருந்தாலும் கூட, அதை நல்ல முறையிலேயா வெங்கட் பிரபு, தமிழ் ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார் என்பது எனது கருத்து. ஆனால் பாடல்கள் வேஸ்ட்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
ஏதோ ஒரு டிவியில் ஊமை விழிகள். அது எடுக்கப் பட்ட காலகட்டத்தில், இந்தப் படத்தின் ஒளிப்பதிவு நன்றாயிருக்கிறது என்று தோன்றியது.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அப்படி எதுவும் தாக்கி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனதாக நினைவில்லை. பொதுவாக மணிரத்னம் படங்கள் கொஞ்சம் என்னை அசைத்துப் பார்க்கும். அவ்வளவுதான்.

5.அ) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
நிறைய பேர் சொல்லி விட்டதைப்போல், பாட்ஷா பட வெற்றிவிழா சம்பவத்துக்குப் பின், ரஜினி ஜெவுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்ததுதான். ஏனென்றால் எம்ஜிஆர் அரசியல் பிரவேசத்தின் போது நான் பிறக்கவில்லை.
5-ஆ) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
கணிணி வரைகலைதான். முன்பே ராஜபார்வையிலிருந்து கமலும், அஞ்சலியிலிருந்து மணிரத்னமும்(அதற்கு முன்பு ஏதாவது இருக்கிறதா?) கிராஃபிக்ஸை தங்கள் படங்களில் உபயோசித்திருந்தாலும், ஷங்கர்தான் அதை சரியான படி தமிழ்திரையுலகினருக்கு அறிமுகப்படுத்தி மார்க்கெட் செய்தார். அது தமிழில் இன்னும் பெர்ஃபெக்ஷன் அடைய வேண்டும் என்பது எனது விருப்பம்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
முன்பு குமுதம், விகடன், வாரமலரிலிருந்து... சினிக்கூத்து வரை விடாமல் வாசித்திருக்கிறேன். இப்பொழுது வலைப்பதிவுகளில் படிப்பதோடு சரி.

7.தமிழ் சினிமா இசை?
ரஹ்மான் வரும் முன்பு வரை திரை இசையில் அவ்வளவாக ஆர்வம் இருந்தது கிடையாது(அப்ப கர்நாடக இசையில் ஆர்வம் இருந்ததான்னெல்லாம் கேட்கக் கூடாது). அதற்கப்புறம் ரஹ்மானின் தீவிர விசிறி. இப்பொழுது இளையராஜா, வித்யாசாகர், ஹாரிஸ், அவ்வப்போது யுவன் என்று ரசிக்க முடிகிறது. பழைய பாடல்களை(டி.எம்.எஸ், சீர்காழி,ஏ.எம்.ராஜா, கண்டசாலா, PBS) சிறுவயதில் வானொலி மூலம் கேட்டுப் பழகியதால், எப்பொழுதுமே அவை எனது ஃபேவரைட்.(இசை பற்றி மட்டும் கேட்டதால் பாடல்கள்/வரிகள் சாய்ஸில் விடப்படுகிறது).

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இந்திய சினிமாவில் இந்தி சினிமாக்கள் பலவும், தெலுங்கு படங்கள சில பலவும் மட்டும் பார்த்திருக்கிறேன். உலக சினிமாவில் ஹாலிவுட்டையும், ஜாக்கி சான், ஜெட்லி தவிர வேறு எதுவும் பார்த்ததில்லை. பொதுவாக சைன்ஸ் ஃபிக்ஷன் வகையறாக்கள் பிடிக்கும், ஒரு சில பீரியட் படங்களும்!! பாதித்த சினிமா என்பதை தவிர்த்து, பார்த்து வியந்த படங்கள் பல இருக்கின்றன. சார்லியின் ”தி கிரேட் டிக்டேட்டர்”ல் இருந்து, ராபர்ட் ஸெம்மிக்ஸின் ”பேக் டூ தி ஃபியூச்சர்” வழியாக, வசௌஸ்கி சகோதரர்களின் ”தி மேட்ரிக்ஸ்” வரை ஹாலிவுட்டின் தொழில்நுட்ப ரீதியான அசத்தல்களை கண்டு பிரமித்திருக்கிறேன்.

9. அ) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
இது ஒரு நல்ல்ல்ல கேள்வி!! அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. சுஜாதாவின் கீழ் ஒரு பிராஜக்டில் சில காலம்(ஒரு மாதம்) பணியாற்றிய பொழுது, அவர் அந்நியன் கதையை எழுதி முடித்து விட்டிருந்தார். அது பற்றி அவரின் உதவியாளரிடம் கதையின் ஒன்லைன் என்ன என்று கேட்ட அளவுக்கு மட்டுமே எனது நேரடித்(?!) தொடர்பு.
9. ஆ) பிடித்ததா?
ஓ! ஒன்லைன் என்ன என்று கேட்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அது எனக்கே தெரியாது என்று அந்த உதவியாளர் சொன்னதுதான் பிடிக்கவில்லை.
9. இ) அதை மீண்டும் செய்வீர்களா?
இப்பதான் எனக்கு முழுப்படமும் தெரியுமே. அப்புறம் எதுக்கு மறுபடியும் ஒன்லைன் கேட்கனும்?!
9. ஈ) தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
தமிழ் இயக்குநர்களுக்கு அவர்கள் இயக்கும் படங்களின் ஒன்லைன் சரியாக புரிந்தாலே தமிழ் சினிமா இன்னும் மேம்பட்டு விடும் என்பது எனது கருத்து!

10. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
பெரிதாக ஒன்றும் நடந்து விடாது என்றே நினைக்கிறேன். பல பேர் கொஞ்ச நாள் பேஸ்த் அடித்தாற் போல் இருப்பார்கள். அப்புறம் வேறு ஏதாவது பொழுதுபோக்கை நாடிப் போய் விடுவார்கள். அந்த பொழுதுபோக்கை தருவதற்குரிய மீடியாவும் உருவாகிவிடும். ஒரு காலத்தில் புத்தகமும், தொடர்கதையும் படித்தவர்கள், தொலைக்காட்சி, மெகா சீரியல், இணையம் என்று மாறி விடவில்லையா?


கோர்த்து விடுவது

இது பற்றி யோசித்ததில் ஒரு பதிவே போடும் அளவுக்கு விஷயம் இருப்பதாகத் தோன்றியதால், தனிப்பதிவாக இட்டிருக்கிறேன். அதை இங்கே சொடுக்கி படித்துக் கொள்ளவும்.

2 comments:

narsim said...

யோசிப்பவர்..

நன்றி..

9வது கேள்விக்கு பதில்கள் மிக அருமை..

அப்புறம்.. சொல்லக்கூடாத படங்களா ? அது செல்லக்கூடாத படங்கள் சார்..

மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்..

நர்சிம்

யோசிப்பவர் said...

என்னடா, யாருமே படிச்ச மாதிரி தெரியலையேன்னு நினைச்சிட்டிருந்தேன். நீங்களாவது படிச்சீங்களே, நன்றி நர்சிம். இந்தப் பதிவை விட மீம் தொடருக்கு அழைப்பது குறித்த பதிவை நிறைய பேர் பார்க்கவாவது செய்கிறார்கள்!!;-)