Thursday, June 25, 2009

தொடர முடிந்த தொடர் விளையாட்டு

வலையுலகில் இதுவரை நடந்த பல தொடர் விளையாட்டுக்களில் எனக்குள்ள சங்கடம் என்ன என்பதை முன்பே இங்கே விளக்கியுள்ளேன். இந்த 32 கேள்வி பதில் தொடருக்கு சினேகிதி சகாராத் தென்றல் அழைத்தபொழுதும் அதைத்தான் சொன்னேன். ஆனாலும் இப்பொழுது 32 கேள்விகளுக்கு ஏன் பதில் எழுதியிருக்கிறேன் என்று 15வது கேள்விக்கான பதிலைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
முதன் முதலாக ஆரம்பித்த வலைப்பதிவு யோசிங்க. அதற்காக யோசிப்பவர் என்று வைத்துக் கொண்டேன். நானே வைத்துக் கொண்ட பெயர் இது. பிடிக்காமலா வைத்துக் கொண்டிருக்கிறேன்?!

2) கடைசியா அழுதது எப்போது?
இந்தக் கேள்விக்கு பதில் படிக்குமுன் இங்கே சென்று 1-அவுக்கான பதிலை படித்து விடவும்.
கடைசியா அழுதது பல மாதங்களுக்கு முன்பு. துக்கம் தொண்டையைத் தாண்டி கண்களை அடைய விடுவதில்லை!!;-)

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
தற்பொழுது நான் கையால் எங்கேயெல்லாம் எழுதுகிறேன் என்று யோசித்துப் பார்த்தால், கடன் அட்டை மூலமாக பொருட்கள் வாங்கப் போடும் கையெழுத்து, சில அலுவலக கட்டிடங்களுக்குள் நுழைய எண்ட்ரி கையெழுத்து. அவ்வளவுதான். அவையும் ஆங்கிலத்தில்தான். தமிழில் பேனா பிடித்து எழுதுவதற்கு இப்பொழுதெல்லாம் பயமாயிருக்கிறது. படிக்கும் காலத்தில் என்று பார்த்தால், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என்று எந்த மொழியாயிருந்தாலும் பாரபட்சமில்லாமல், என் கையெழுத்து ஆகக் கண்றாவியாக இருக்கும். பிடிக்குமா?!

4) பிடித்த மதிய உணவு?
காரமாக பொரித்த அசைவ உணவுகள். அதற்காக தினமும் அவற்றை சாப்பிட முடியாது. எனக்கு வெரைட்டி இருந்தாக வேண்டும்.

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?
அந்த வேறு யாராவது யார் என்று தெரிந்தால்தானே சொல்ல முடியும். அந்த வேறு யாராவதாய் இருக்கும்பொழுது, என்னென்ன விருப்பங்கள்/வெறுப்புகள் இருக்குமோ!?

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
எது அருகில் இருக்கிறதோ அது. கடலருகில்தான் பிறந்ததும் வளர்ந்ததும். நீச்சல் பழகியதோ ஆற்றில். வருடாவருடம் குற்றாலத்து சீஸன் விசிட்டை தவற விட்டதில்லை. மொத்தத்தில் தண்ணீர் இருந்தால் போதும். எது என்பது முக்கியமில்லை!!

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
முகம். முக்கியமாக கண்கள்.

8) உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் என்ன? பிடிக்காத விசயம் என்ன?
பிடித்தது - எதிலும் எப்பொழுதும் Perfectionistஆக இருக்க விரும்பும் நினைப்பு.
பிடிக்காதது - நிஜத்தில் அப்படி இருக்க முடியாதது.

9)உங்கள் துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
இந்தக் கேள்வியை சாய்ஸில் விடுகிறேன்.

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
முன்பு வருந்தியிருக்கிறேன். இப்பொழுது வருந்துவதில்லை.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
இதெல்லாம் என்னக் கேள்வி, அந்தரங்கத்தில் எட்டிப் பார்த்துக் கொண்டு?!:-(

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
என் குழந்தையின் சிணுங்கல்களை.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக இப்படி இஷ்டத்துக்கெல்லாம் கேட்கக் கூடாது. யாருப்பா கொஸ்டின் செட் பண்ணினது?

14) பிடித்த மணம்?
எல்லா நாற்றங்களும். கூவம் கூட! ஏனென்றால் இதைத்(நுகர்வதை) தவிர்க்க முடியாது.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
பிடித்த விஷயம் - நான் அழைத்தவுடன் என்னைப் போல பந்தா எதுவும் செய்யாமல் உடனே ஒத்துக் கொண்டார்.
அழைக்கக் காரணம் - அவர் ஒருவர்தான் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
பொதுவாக கவிதைகள் என்றாலே எனக்கு அலர்ஜி. ஆனால் என்னையும் தங்களது சில கவிதைகளால் படிக்கத் தூண்டியவர்களில் சகாராத் தென்றலும் ஒருவர். குறிப்பிட்டு இந்தப் பதிவு/கவிதை பிடிக்கும் என்று சொல்லத் தோன்றவில்லை. ஆனால் இவர் இன்னும் வெவ்வேறு தளங்களிலும் கவிதை எழுதினால் நன்றாக இருக்கும் என்று என்னை நினைக்க வைத்தவர்.

17) பிடித்த விளையாட்டு?
பொதுவில் சொல்லக் கூடாது.

18) கண்ணாடி அணிபவரா?
ஒரு காலத்தில்.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
நாடகத்தனமில்லாத நடிப்பு கொண்ட எல்லாவகையான திரைப்படங்களும். கதையம்சத்தில் நாடகத்தனம் இருக்கலாம்.

20) கடைசியாகப் பார்த்த படம்?
காட்ஸ் மஸ்ட் பி கிரேஸி.(Gods must be crazy)

21) பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலம். பாக்கெட்களில் எதுவுமில்லாமல், நம்மை நம்பி கூடவும் யாருமில்லாவிட்டால், மழையில் நனைந்து கொண்டு வண்டியோட்ட ரொம்பப் பிடிக்கும்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
எந்தப் புத்தகம் கடைசியாக படித்து முடித்தீர்கள் என்று கேட்டால் பொருத்தமாயிருக்கும். புத்தகத்தை எடுத்து விட்டால் அதை முடிக்கும் வரை வேறு வேலை ஓடாது. கடைசியாகப் படித்தது சுஜாதா நினைவுப் புனைவு 2009 - பரிசு பெற்றக் கதைகள். கடைசியாக படித்தவற்றில் பிடித்த புத்தகம் - தேவனின் சிறுகதைத் தொகுப்பு மாலதி.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
முன்பு அடிக்கடி மாற்றுவேன். இருபது நிமிடத்துக்கொருமுறை மாற்றுவதற்கு தனி ஸாஃப்ட்வேரே வைத்திருந்தேன். இப்பொழுதெல்லாம் மாற்றுவதேயில்லை.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
அழகிய வெட்க மௌனம். ஆளில்லா கொடூர மௌனம்.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
இந்திய தேசத் தலைநகரம்.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
அப்படியொன்றும் எனக்கென்று தனித்திறமை கிடையாது. உங்களுக்கு இருக்கும் திறமைகளில் ஏதாவது ஒன்று வேண்டுமானால் இருக்கலாம். எனக்கே எனக்கான தனியான திறமை ஒன்றும் கிடையாது.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நான் ஏற்றுக் கொள்ளாவிட்டால் குடி முழுகிப் போய்விடுமா? மேலும் அப்படிப்பட்ட விஷயங்கள், எனக்கு அடிக்கடி மாறிக் கொண்டேயிருக்கின்றன.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சோம்பேறித்தனம்.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
ஒரு இடத்துக்கு திரும்பத் திரும்பப் சுற்றுலா போவது பிடிக்காது. புதிய புதிய இடங்களுக்கு செல்லவே ஆசை, அவை சுற்றுலாத் தலமாக(தலம் சரியா? தளம் சரியா?) இல்லாவிட்டால் கூட. (குற்றாலத்தை சுற்றுலாத் தலப் பட்டியலில் நான் சேர்க்க மாட்டேன்.)

30) எப்படி இருக்கணும்னு ஆசை?
எப்படி வேணா இருக்க ஆசை.

31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
சொல்ல முடியாத காரியம்.

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க
நிஜமாக சொல்ல வேண்டுமென்றால் - புரியவில்லை!!!

கடைசியாக இதைத் தொடர நான் அழைக்க விரும்புவது இரா. வசந்தகுமார்(ஏற்கனவே சொல்லி வச்சாச்சு!!). வசந்தகுமாரும் நானும் புரட்டிப் போட்ட படைப்புகள் குழுவில் இருந்தாலும், நான் அவரது எழுத்துக்களை படிக்கத் தொடங்கியது சிறில் அலெக்ஸ் நடத்திய போட்டியின் போதுதான். மனிதர் அந்தப் போட்டிக்கு மட்டுமே கிட்டத்தட்ட 15 கதைகளை ஒரு மாத காலத்துக்குள் எழுதி அயரடித்தார். அதற்கப்புறம் ஃபோன் மூலம் பரிச்சயம். சிறுகதை என்பதின் நெளிவு சுளிவுகளை நன்கறிந்தவர் என்பது இவரது கதைகளைப் படித்தாலே புரியும். சமீபத்தில் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இடம் பிடிக்கத் தொடங்கியுள்ள அவரை 32ஐ தொடர்ந்து அடித்து ஆட அழைக்கிறேன்.

5 comments:

காஞ்சனை said...

உங்களைப் பற்றிக் கொஞ்சம் அறிந்து கொள்ள உதவியது இந்தப் பதிவு. அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ;-))

//24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
அழகிய வெட்க மௌனம். ஆளில்லா கொடூர மௌனம்.//

இந்த பதிலை மிகவும் ரசித்தேன்.

நையாண்டி நைனா said...

நல்லாத்தான் இருக்கு...

நிலாரசிகன் said...

//10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
முன்பு வருந்தியிருக்கிறேன். இப்பொழுது வருந்துவதில்லை.//

ஹைய்ய எனக்கு தெரியும் எனக்கு தெரியும் :)

//பொதுவாக கவிதைகள் என்றாலே எனக்கு அலர்ஜி//

எப்படிங்க சார்? உங்களுக்கு கவிதைன்னா அலர்ஜியா?
Time Machineல நாம் இப்போது பயணிக்க போவது 1998ம் வருடம்.
இடம்: காமராஜ் கல்லூரி,தூத்துக்குடி

நிலாரசிகனை நோக்கி வருகிறார் யோசிப்பவர். "நண்பா..இந்த நோட்டு முழுக்க "அவளை" பற்றி கவிதை எழுதி இருக்கேன்.படிச்சுட்டு சொல்லுடா"

Back to 2009:

யோசிப்பவர் அய்யா,
உங்க கவிதையெல்லாம் நல்லா நினைவிருக்கு எனக்கு. இந்த மாதிரி அலர்ஜி,அலராதஜின்னு ஏதாவது சொன்னன்னு வையி..மகனே "யோசிப்பவர் யோசிக்காமல் எழுதிய கவிதைகள்"ன்னு தனி பதிவு போடவேண்டியதிருக்கும்.சொல்லிபுட்டேன் :))

32 பதில்களும் அசத்தல் டா :)

கலையரசன் said...

அருமையா எழுதுறீங்களே, அட மெய்யாலுமே!
தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!

ஓட்டும் போட்டாச்சு..

இரா. வசந்த குமார். said...

எழுதியாச்சு...!!

http://kaalapayani.blogspot.com/2009/06/32-32.html