Wednesday, June 3, 2009

தேவனும் சுஜாதாவும்

தேவன் எப்பொழுதுமே எனது ஃபெவரைட். கிட்டத்தட்ட (கிட்டத்தட்டதான்) அவரின் புத்தகமாக வெளிவந்த அனைத்து சிறுகதைகளையும் வாசித்திருக்கிறேன். இன்று தேவனின் ஒரு சிறுகதை தொகுப்பான மாலதி(கிழக்குப் பதிப்பகம்) புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. அதில் இரண்டு சிறுகதைகள் தவிர மற்ற அனைத்தும் நான் இதுவரை வாசிக்காதவையே! அதில் ஒரே ஒரு கதையின் சாராம்சத்தை மட்டும் இங்கே விவரிக்கலாம் என்று நினைக்கிறேன். அந்தக் கதையின் பெயர் விசித்திர நகரம்.

ஒரு பெரிய இரும்பு வியாபாரி சாகக் கிடக்கிறார். அவரை ஒரு இன்சூரன்ஸ் ஏஜண்ட் போல் இருக்கும் ஒரு வாலிபன் வந்து சந்தித்து, அவர் வியாபாரம் ஆரம்பித்த விவரம் குறித்து விசாரிக்கிறான். அந்த சம்பாஷனையில், அவர் தனது நண்பனின் பணத்தை முதலீடு செய்ததும், பின்னர் அந்த நண்பனையே ஏமாற்றி துரத்திவிடுவதும், அவன் சோற்றுக்கு வழியில்லாமல் செத்துப் போனதும், அவன் குடும்பமும் நசிந்து இறந்து போனதும் நமக்குத் தெரிய வருகிறது. அடுத்த சீனில், அந்த பெரிய மனிதர், ஒரு பெரிய நகரத்தில் ரயிலிலிருந்து இறங்குகிறார். அந்த இன்சூரன்ஸ் ஏஜண்ட் அவரை வழிகாட்டி அழைத்துப் போகிறான். அந்த நகரத்தின் வனப்புகளை பார்த்து வியந்தவாறே அந்த பெரிய மனிதர் போய்க் கொண்டிருக்கிறார். அங்கே, பட்டணத்தில் இருக்கும் தனது பங்களாவைப் போலவே ஒரு பங்களா இருக்க, அது தன்னுடையதுதான் என்ற மயக்கத்தில் உள்ளே நுழைய முயல, அந்த ஏஜண்ட் அவரைத் தடுக்கிறான். பெயர்ப் பலகையைக் காட்டுகிறான். அதில், அவர் தொழிலுக்கு முதல் போட்ட, ஏமாற்றப்பட்ட அந்த நண்பனின் பெயர் இருக்கிறது. அப்பொழுதுதான் அந்த புது நகரம் என்பது மறு உலகம் என்பது வாசிக்கும் நமக்கு உணர்த்தப்படுகிறது. பூவுலகில், அவர் நண்பன் முதல் போட்டத் தொழிலில் அவர் பணம் சேர்க்க சேர்க்க, இங்கே அதே அளவுக்கு செல்வம் அந்த நண்பன் கணக்கில் ஏற்றப்பட்டுள்ளது. அப்புறம் கெட்டவனுக்குத் தண்டனை என்னும் நீதிப்படி அவருக்கு ஒரு கச்சடாவான ஓலை கூட இல்லாக குடிசையே அவர் தங்க வேண்டிய இடம் என்பதாகக் கதை முடிகிறது.

சரி, இப்பொழுது இந்தக் கதைச் சுருக்கத்தை படித்தபின் உங்களுக்கு வேறு ஏதாவது/யாராவது நினைவுக்கு வருகிறதா/றார்களா?

.



.


.


.


.


.

.

.

.

.

.

எனக்கு சுஜாதாவின் வாசல் கதையும், தர்மு மாமா கதையும் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. ஓகே, ஓகே, ஓகே. சுஜாதா காப்பியடித்தார் என்றா சொல்கிறாய், என்று நீங்கள் என்னுடன் சண்டை பிடிக்க கிளம்புமுன், ஒரு சில வரிகள். இரண்டு பேரின் கதைக் களங்களும் வேறு வேறுதான். அதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். மேலும் சுஜாதாவின் தர்மு மாமா கதையின் கான்செப்ட் தனி, வாசல் கதையின் கான்செப்ட் தனி. தேவனின் இந்த ஒரே கதையில் இந்த இரு கான்செப்டுகளும் இணைந்தே வருகின்றன. சுஜாதாவின் கதைகளில் கிடைத்த அந்த ஒரு கிரிஸ்ப்னஸ் தேவனின் கதையில் கிடைக்கவில்லைதான்.

இந்த மூன்று கதைகளையும் படித்தவர்கள் தங்கள் கருத்துக்களையும் கூறலாம்.

1 comment:

இரசிகை said...

neenga sollura alavukkalaam yenakku books paththi theriyaathu..

irunthaalum inthap pathivai vaasikkap pidiththirunthathu:)

sujaatha nna yenakku pidikkum:)