Tuesday, June 30, 2009

கனவும் கற்று மற

தடதடதட... தடதட.

கதவு தட்டப்பட்டது. தலைமாட்டிலிருந்த என் வாட்சை இழுத்து, தூக்க கண்களுடன் மணி பார்த்தேன். 3.40.

'இந்த நேரத்தில் யார்?'

மெதுவாக எழுந்து கதவைத் திறந்தேன். வந்திருந்தவர் குற்றத் தடுப்பு உயரதிகாரி போல் உடையணிந்திருந்தார்.

"என்ன?"

"மிஸ்டர் விசி, அடையாள எண் 12034557..?"

"நான் தான்."

"அரசாங்க விஞ்ஞானி இல்லையா? அதனால்தான் முதல் வரிசை அடையாள எண் கிடைத்திருக்கிறது" என்றபடி அவர் பாட்டுக்கு கொஞ்சம் கூட மரியாதையில்லாமல் உள்ளே நுழைந்து, என்னுடைய ஃபோல்டபுள் குஷன் சோஃபாவை ஆக்கிரமித்தார்.

"எக்ஸ்கியூஸ் மீ. நீங்கள்...?"

"பார்த்தால் தெரியவில்லையா? பை தவே மிஸ்டர் விசி, உங்களை கைது செய்கிறேன்?"

"வாட்? எதுக்கு?"

"நீங்கள் அரசாங்கத்துக்குத் தெரியாமல், ரகசிய ஆராய்ச்சியில் ஈடுபட்டதிற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன."

"அப்படியொன்றும்.."

"பிராஜக்ட் ரஜா", நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன். "எங்களுக்கு எல்லாம் தெரியும்." என்று மெல்லிய குரலில் கூறினார்.

'தெரிந்து விட்டது. என்ன செய்யலாம்?'

"அது ஒன்றும் அரசாங்க விரோத அராய்ச்சி அல்ல. அது ..."

"பிறகு ஏன் அரசாங்கத்துக்கு அறிவிக்காமல் ரகசியமாக ஆராய்ச்சி செய்கிறீர்கள்? விசி, இந்த தேசத்தில் நீங்கள் ஒருவர் மட்டும்தான் விஞ்ஞானியா என்ன? உங்களைப் போன்ற பல விஞ்ஞானிகள் கண்டுபிடித்த, உங்களுக்கே தெரியாத பல நவீன டெக்னாலஜிகள் எங்களிடம் உள்ளன. அப்படியில்லையென்றால் இந்த தேசத்தில் குற்றத்தடுப்பு சாத்தியம் இல்லை."

எனக்கு வியர்த்தது. 'விஷயம் முழுமையாக தெரிந்து விட்டது. இப்பொழுது கைது செய்வதாக கூறினாலும் அங்கே மரணம்தான் காத்திருக்கிறது. நான் ஒன்றும் ஏமாந்தவனல்ல. கைதாகி விட்டால் தீர்ந்தது.'

என் கால்கள் லேசாக வாசல் நோக்கி திரும்பியதுமே, அவர் கைகளில் அடாமிக் கன் முளைத்தது.

"நோ அதர் தாட்ஸ் விசி." குரலில் கேலியே இருந்தது. அவர் கைகளுக்கும் எனக்கும் பத்தடி இருந்தது.

அடுத்த நொடியே என்னுடைய கைகளில் அதே கன். "ஸாரி மிஸ்டர். நான் இப்பொழுது போக வேண்டும்.", கன் ட்ரிக்கரை அழுத்த்த்தியே விட்டேன்.

'பவ்' என்ற மிக மெல்லிய ஒலி. அவர் மார்புக்கு மிக அருகே நிறைய ரத்தம்.
கொ...ன்..று....

சட்டென்று ஏற்பட்ட உணர்வில், விழித்துப் பார்த்த நான் தலைமாட்டிலிருந்த வாட்சை எடுத்துப் பார்த்தேன். 3.35

முகமெல்லாம் வியர்த்து இருந்தது. 'எவ்வளவு பயங்கர கனவு? ரகசிய ஆராய்ச்சி..? நான் அப்படியேதும் செய்யவில்லையே? அதற்கு ஒரு பெயர் வேறே. ரஜா. இந்த மாதிரி வார்த்தையை எப்பொழுதாவது கேட்டிருக்கிறேனா? எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கொலை வேறு!! அதிகாரியின் கையிலிருந்த கன் எப்படி என் கைக்கு வந்தது? ஏன் இப்படியொரு கனவு வந்தது?'

தடதடதட... தடதட.

கதவு தட்டப்பட்டது.

எனக்கு பயம் கொடுத்தது. 'ஏதாவது பழைய ஆங்கிலப் படங்கள் போல், உண்மையிலேயே கனவில் வந்தது நிஜத்திலும் நடக்குமோ? ஆனால், நான் தான் அப்படி எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லையே.'

மெதுவாக சென்று கதவை திறந்தேன். வந்திருந்தவர் சாதாரணமாக நைட் டிரஸ்தான் போட்டிருந்தார். கனவில் வந்த முகம் வேறு மாதிரி இருந்ததாக ஞாபகம்.

"மிஸ்டர் விசி, அடையாள எண் 12034557..?"

"நான் தான்."

"தூக்கத்தில் எழுப்பியதற்கு மன்னிக்கவும். உங்களை கைது செய்ய வேண்டியிருக்கிறது."

"வாட்? எதுக்கு?" நடுங்கினேன்.

அவர் மெதுவாக புன்னகைத்து, "மிஸ்டர் விசி. நீங்களே ஒரு அரசாங்க விஞ்ஞானி. கனவுகளைக் கூட நாங்கள் ஸ்கான் செய்வோம் என்று உங்களுக்குத் தெரியாதா? உங்கள் கனவில் ஒரு குற்றப்பிரிவு அதிகாரியை கொன்றதற்காகவும், அரசுக்கெதிரான ரகசிய ஆராய்ச்சி பற்றிய எண்ணங்கள் மனதில் முளை விட்டதற்கும், உங்களை கைது செய்கிறேன்."

“ஸீ. நான் அந்த மாதிரி ரகசிய ஆராய்ச்சி எதுவும் செய்யலை. அது ஒரு...”

“இது வரை செய்யவில்லை. இனிமேல் செய்ய முனையலாம். உங்கள் கனவுகள் உங்களை வழிநடத்தலாம். எண்பது சதவீதம் குற்றங்களும், கண்டுபிடிப்புகளும் கனவுகளிலிருந்தே பிறக்கின்றன. அதற்காகத்தான் இந்த கனவு ஸ்கானிங் டெக்னாலஜியை எங்கள் குற்றத் தடுப்புப் பிரிவு தத்தெடுத்துக் கொண்டது.”

எனக்கு வியர்த்தது. என் கருவிழிகள் வாசலுக்கு ஒருமுறை ஓட, அவர் கைகளில் அந்த அடாமிக் கன் முளைத்தது.

“பைத்தியக்காரத்தனமாக ஏதும் செய்யாதீர்கள் மிஸ்டர் விசி.”. அந்தத் துப்பாக்கி என் தலையை தீவிரமாக முறைத்தது.

அவர் என்னை நோக்கி ஓரடி எடுத்து வைக்க, தரையில் புரண்டு கொண்டிருந்த படுக்கையை சுவரோடு கட்டுவதற்கு உபயோகிக்கும் ஸ்ட்ராப், அவர் ஷூவுக்கு மேலான சாக்ஸைப் பிடித்து இழுக்க, என்னை நோக்கி முன்னே சரிய, அவர் கையிலிருந்த கன்...

என்னுடைய கைகளில் அதே கன்.

தடதடதட... தடதட.




12 comments:

சென்ஷி said...

:)

யோசிப்பவர் ஷ்டைல் கதை!

seik mohamed said...

பாராட்டுக்கள்...

கலையரசன் said...

அருமையான எழுத்து நடை!
வெற்றி பெற வாழ்த்துகள்..

தினேஷ் said...

இப்டியுமா ? என்னத்த போங்க .. இப்படி நடந்தால் எல்லா பேரும் குற்றவாளிகள்தான் .

மொழி said...

ஒரு சுஜாதா கதை படித்தது போல் உள்ளது...
வாழ்த்துக்கள்..

Sridhar Narayanan said...

:) அடாமிக் கன், ரகசிய ஆராய்ச்சி, விஞ்ஞானின்னு டெம்ப்ளேட்ல எழுதிட்டீங்கப் போல. அவசரமா எழுதினீங்களோ?

ஏற்கெனவே படிச்ச மாதிரி ஒரு உணர்வு. கனவுகளை ஸ்கேன் செய்யறது நல்ல தாட்.

வாழ்த்துகள்! :)

யோசிப்பவர் said...

சென்ஷி,
நீங்க பாராட்டறீங்களா, திட்டறீங்களான்னே தெரியலையே!!;-)

யோசிப்பவர் said...

நன்றி பார்சா குமாரன்!!

நன்றி கலையரசன்!!

யோசிப்பவர் said...

//இப்டியுமா ? என்னத்த போங்க .. இப்படி நடந்தால் எல்லா பேரும் குற்றவாளிகள்தான் .//

ஆமாம் சூரியன். அதிருக்கட்டும், இப்போ மட்டும் எல்லோரும் உத்தமசீலர்கள்னு நினைக்கிறீங்களா?!;-)

யோசிப்பவர் said...

நன்றி மொழி!!

யோசிப்பவர் said...

//அடாமிக் கன், ரகசிய ஆராய்ச்சி, விஞ்ஞானின்னு டெம்ப்ளேட்ல எழுதிட்டீங்கப் போல. அவசரமா எழுதினீங்களோ?
//

ஸ்ரீதர்,
கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்களே!! உண்மையிலேயே டெம்ப்ளேட்லதான் எழுதினேன்!!!;-)

MEENA said...

i have alredy read this story in live